அரசியலமைப்பின் இயல்பான தன்மையை மாற்றுவதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிருந்தா காரத் கூறியுள்ளார்.
Raipur: மத அச்சுறுத்தலுக்கு ஆளான அண்டை நாட்டில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குடியுரிமை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத அச்சுறுத்தலுக்கு ஆளான மியான்மரின் ரோஹிங்யாக்கள், பாகிஸ்தானின் அகமதியாக்களை என்ன செய்வீர்கள் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது-
அரசியலமைப்பின் இயல்பான தன்மையை மாற்றுவதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியலமைப்பை பலவீனப்படுத்தி, நாட்டை பிரிப்பதற்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
கடந்த 1950-ல் அம்பேத்கர் தலைமையிலான குழு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியபோது, ஒட்டுமொத்த நாடே அதனை வரவேற்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான் எதிர்ப்பு தெரிவித்தது.
அண்டை நாடுகளில் மத ரீதியில் அச்சுறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தருவதற்காக குடியுரிமை சட்ட திருத்தம் ஏற்படுத்தப்பட்டது என்று மத்திய அரசு கூறுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மட்டும்தான் நம்முடைய அண்டை நாடுகளா?
நேபாளத்திலும், மியான்மரிலும், இலங்கையிலும் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். இலங்கையில் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இந்தியா வரும் தமிழர்கள் ஏன் இந்த சட்டத்தில் இடம்பெறவில்லை?
மியான்மரில் ரோஹிங்யாக்களும், பாகிஸ்தானில் அகமதியாக்களும் மத ரீதியில் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்கள் ஏன் குடியுரிமை சட்ட திருத்தத்தில் இடம்பெறவில்லை? அவர்கள் இந்துக்கள் இல்லையென்பதால் இடம்பெறவில்லையா?
இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர், மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு 2015-க்கு முன்பு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டம் அவர்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.