This Article is From Sep 04, 2018

இந்தியாவுக்கான பிரிட்டனின் நிதியுதவி- கேள்வி எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியாவுக்கான பிரிட்டனின் நிதியுதவி குறித்து அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

இந்தியாவுக்கான பிரிட்டனின் நிதியுதவி- கேள்வி எழுப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
London:

இந்தியாவுக்கான பிரிட்டனின் நிதியுதவி குறித்து அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியாவுக்கான நிதி உதவியாக தற்போதைய 2018- 19 ஆண்டுக்காக 52 மில்லியன் பவுண்டுகளும் 2019-20 ஆண்டுக்காக 46 மில்லியன் பவுண்டுகளும் பிரிட்டன் ஒதுக்கீடு செய்துள்ளதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரிட்டனின் அயல்நாட்டு வளர்ச்சித் துறை சமீபத்தில் இந்தியாவுக்காக அளிக்க உள்ள உதவிகள் குறித்த பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. இதுகுறித்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த டேவிட் டேவிஸ் கூறுகையில், ‘இந்தியாவுக்கு பிரிட்டனின் நிதியுதவி தேவையோ அவசியமோ கிடையாது. இந்த சூழலில் தான் பிரிட்டன் இந்தியாவின் சந்திரனுக்கான விண்கல திட்டத்துக்கு உதவி அளிக்கிறது’ என்றுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் சந்திரனுக்கான சந்திராயன்- 2 பயணத்துக்கு இந்தியாவுக்காக பிரிட்டனின் 95.4 மில்லியன் பவுண்டுகள் உதவி குறித்துத் தான் ஆளுங்கட்சி உறுப்பினர்களே கேள்வியெழுப்பி தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

அயல்நாடுகளுக்காக பிரிட்டனின் செயல்திட்டங்கள் குறித்து ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ என்ற பத்திரிகையில் நாடாளுமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர் டேவிட் டேவிஸ் கூறியிருப்பதாவது, ‘ஒரு விண்வெளித் திட்டத்தை சொந்தமாகக் கொண்டுள்ள ஒரு நாட்டுக்கு நாம் பணம் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். வரி செலுத்துவோர்களின் பணத்தை அரசு இப்படித்தான் அயல்நாடுகளுக்கான உதவியாகத் தருவதா என்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்’ என்றுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இது முற்றிலும் நியாயமற்றது. முட்டாளதனமானது’ என்றுள்ளார்.

ஆனால், பிரிட்டனின் அயல்நாட்டு வளர்ச்சித் துறையே இந்த நிதி உதவி இந்தியா சந்திராயன்- 2 விண்கலத்தை ஏவுவதற்கானது அல்ல என்று மீண்டும் மீண்டும் விளக்கமளித்து வருகிறது. இதுகுறித்து அத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ‘பிரிட்டனின் அயல்நாட்டு வளர்ச்சித் துறை இந்தியாவுக்கான உதவிகளை கடந்த 2015-ம் ஆண்டுடன் நிறுத்திக்கொண்டது. ஆனால் தற்போது பிரிட்டன் அளித்து வரும் நிதி உதவியின் மூலம் அந்த நாடு நீடித்த வளர்ச்சியை அடைந்து தகுந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி சந்தைகளை உருவாக்குவதன் மூலம் அது மீண்டும் பிரிட்டனுக்குத்தான் வருவாய் அளிக்கும். இது முற்றிலும் அரசாங்கத்துடைய திட்டம். இதில் பிரிட்டனின் வரி செலுத்துவோர்களின் பணம் வீண்டிக்கப்படவில்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

.