சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த மாநகராட்சி பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துவந்துள்ளனர். அப்போது, இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கினர்.
ரவுடிகள் போல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் சக கல்லூரி மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். இதில் வசந்த் என்ற மாணவரை சாலையில் ஓட விட்டு விரட்டி சென்று வெட்டியுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரிவாள் வெட்டியதில் காயம் அடைந்த மாணவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் நடந்து கொள்ளும் போக்கு, பெற்றோர்களை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.
தொடர்ந்து, பேருந்து மற்றும் ரயில்களில் ரூட் தல யார் என்பதில் இது போன்ற மோதல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால், மாணவர்கள் கல்லூரி சென்று வரும் நேரத்தில் சென்னை முழுவதும் ரயில் மற்றும் சாலைகளில் அதிகளவிலான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.