This Article is From Nov 01, 2019

பள்ளிப் பாடப் புத்தகத்தில் திப்பு சுல்தான் வரலாறு நீக்கப்படுமா? - முதல்வர் பதில்

கர்நாடகத்தில் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து திப்பு சுல்தான் விவகாரத்தை கையில் எடுத்து வருகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திப்பு ஜெயந்தியை பாஜக அரசு ரத்து செய்தது.

பள்ளிப் பாடப் புத்தகத்தில் திப்பு சுல்தான் வரலாறு நீக்கப்படுமா? - முதல்வர் பதில்

திப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru:

கர்நாடக பள்ளி பாடப் புத்தகங்களில் திப்பு சுல்தானின் வரலாறு இடம்பெறுமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரரான திப்பு சுல்தான், கர்நாடக மாநில மைசூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். வெள்ளையருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்த அவரது வரலாறு, நாட்டின் பல மாநிலங்களில் உள்ள பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. 

கர்நாடகத்தில் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து திப்பு சுல்தான் விவகாரத்தை கையில் எடுத்து வருகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திப்பு ஜெயந்தியை பாஜக அரசு ரத்து செய்தது. தற்போது பாடப்புத்தகத்திற்கு வந்திருக்கும் பாஜக, திப்புவின் வரலாற்றை பள்ளிப் புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. 

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன், கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குடகுப் பகுதியில் வாழும் கோண்டவா மக்கள் திப்பு சுல்தானால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மதமாற்ற சம்பவங்களும் திப்பு சுல்தான் காலத்தின்போது அதிகம் நடந்தன. அவற்றை குறிப்பிடாமல் திப்புவின் புகழ்பாடும் பக்கங்கள் பாடப்புத்தகத்தில் இருப்பதை ஏற்க முடியாது. எனவே அவற்றை நீக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பாவிடம் திப்பு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, 'திப்பு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு மாறாது. ஆய்வுக் கமிட்டி அறிக்கை அளித்த பின்னர் திப்புவின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார். 

.