This Article is From Jul 06, 2020

'கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்; அச்சப்பட வேண்டாம்' - எடியூரப்பா

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக கர்நாடகாவில் 33 மணி நேர முழு ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்களான இன்று மாலை 5 மணி வரைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. 

'கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்; அச்சப்பட வேண்டாம்' - எடியூரப்பா

பெங்களுருவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

ஹைலைட்ஸ்

  • பெங்களூருவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது
  • மக்கள் அரசுடன் ஒத்துழைக்கும்போது நம்மால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்
  • தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.
Bengaluru:

கொரோனாவை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மக்கள் அதனுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். பெங்களூரு மக்களுக்குத்தான் அவர் இந்த அட்வைஸை செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

கொரோனாவை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம் என்பதை பெங்களூரு மக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். கூடுதலாக 450 ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்பாடு செய்திருகிறோம். மக்கள் கொரோனாவைக் கண்டு அச்சம் கொள்ள வேண்டாம்

கொரோனா வைரசுடன் வாழுவதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும். மக்கள் அரசுடன் ஒத்துழைக்கும்போது நம்மால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். மக்கள் உயிர் எவ்வளவு முக்கியமானது என்பதை அரசு உணர்ந்துள்ளது. மருத்துவமனைகள் தயார்படுத்தப்படுகின்றன. தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக பெங்களூரு இருந்து வருகிறது. இங்கு 8,345 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 129 பேர் உயிரிழந்துள்ளார்கள். 7,250 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக கர்நாடகாவில் 33 மணி நேர முழு ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்களான இன்று மாலை 5 மணி வரைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. 

.