This Article is From Dec 10, 2019

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!!

கர்நாடகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. அங்கு பாஜக ஆட்சி அமலுக்கு வந்து 4 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா!!

அமைச்சரவையை இறுதி செய்ய மோடி, அமித் ஷாவை எடியூரப்பா சந்திக்கவுள்ளார்.

Bengaluru:

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் விரைவில் அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது-

இன்னும் மூன்று, நான்கு நாட்களில் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை  சந்தித்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பேசவுள்ளேன். அவர்கள்தான் இறுதி முடிவு எடுப்பார்கள். 

நான் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின்படி யாரெல்லாம் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்களோ அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும். இதனை நூறு சதவீதம் நிறைவேற்றி முடிப்பேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். இடைத்தேர்தலில் மொத்தம் உள்ள 15 தொகுதிகளில் பாஜக 12-ல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பாஜக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களில் இடைத்தேர்தலை எதிர்கொண்டது. 

அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது என்பது எடியூரப்பாவுக்கு லேசான காரியம் அல்ல. அவர் வாக்குறுதி அளித்தபடி காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து வெளியேறி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கும் பழைய சகாக்களுக்கும் அமைச்சர் பொறுப்பை உறுதி செய்ய வேண்டும். எடியூரப்பா அளித்திருக்கும் அமைச்சர் பதவி வாக்குறுதியால் பழையவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

பல்வேறு சாதியைச் சேர்ந்தவர்களுக்கு சமமான அளவில் அமைச்சர் பதவியை பங்கீடுசெய்யும் பொறுப்பும் எடியூரப்பாவுக்கு உண்டு. 

தற்போது அமைச்சரவையில் மொத்தம் 18 பேர் இருக்கிறார்கள். அதிகபட்சமாக 34 அமைச்சர்கள் வரையில் கர்நாடக அரசில் இருக்கலாம். 

பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த விஷ்வநாத் (ஹனாசுரு தொகுதி), எம்.டி.பி. நாகராஜ் (ஹோசாகோட் தொகுதி) ஆகியோரின் நிலைமை என்ன என்று எடியூரப்பாவிடம் கேட்டதற்கு அவர்கள் பற்றி பேச முடியாது, தனிப்பட்ட முறையில் அவர்களுடன் பேசுவேன் என்று தெரிவித்தார். 

பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்ற ஊகம் சமீபத்தில் பரவியது. சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியான எம்.எல்.சி. மூலம் அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

இருப்பினும், இதற்கு கட்சியின்  மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதேபோன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்தார். அதுபற்றி கருத்து தெரிவிக்கவும் எடியூரப்பா மறுத்து விட்டார். 

இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. ஏற்கனவே 12 தொகுதிகளை வைத்திருந்த காங்கிரசுக்கு இந்த நிலை ஏற்பட்டது. இந்த  நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் மாநில தலைவர் குண்டு ராவ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

.