This Article is From Dec 21, 2019

CAA-க்கு எதிரான போராட்டம்: தற்போதைய நிலவரம் அறிய மங்களூரு செல்லும் எடியூரப்பா!

துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் பசவாராஜ் பொம்மாய் உள்ளிட்டோருடன் இன்று நான் மங்களூரு செல்கிறேன்.

CAA-க்கு எதிரான போராட்டம்: தற்போதைய நிலவரம் அறிய மங்களூரு செல்லும் எடியூரப்பா!

CAA-க்கு எதிரான வன்முறையை தொடர்ந்து, நிலவரம் அறிய மங்களூரு செல்லும் எடியூரப்பா! (File)

Bengaluru:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போரட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, மோதலை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, இன்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மங்களூரு செல்கிறார். அங்கு தற்போதைய நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் அவர் கலந்தாலோசிக்க உள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மாணவர்கள் தரப்பிலும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் சில அமைப்புகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து கர்நாடகா போலீசார் பெங்களூருவில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த போராட்டத்தில் பிரபல வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா கலந்து கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து, மங்களூருவில் நடைபெற்ற கலவரத்தில் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகினர். போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மங்களூரு செல்கிறார். இதுதடொர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் பசவாராஜ் பொம்மாய் உள்ளிட்டோருடன் இன்று நான் மங்களூரு செல்கிறேன். அங்கு அதிகாரிகளுடன் ஆலசோனை நடைபெற உள்ளது. இதில், மங்களூரு கலவரத்திற்கான காரணம் குறித்து கேட்டறிய உள்ளதாக கூறினார். 

இந்த சந்திப்பிற்கு பின்னரே இந்த சம்பவம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

இது குறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையா் பி.எஸ்.ஹா்ஷா கூறுகையில்,‘மங்களூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இல்லை.மங்களூரு அமைதியாக உள்ளது. டிச.22ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். பொதுமக்களின் நலன் கருதி இணையதளசேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அச்சப்படதேவையில்லை. மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.‘ என்றார்.

இதனிடையே, மக்கள தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வசதியாக மங்களூரில் இன்று காலை சிறிது நேரம் தடை உத்தரவு தளர்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

.