துப்பாக்கிச் சூடு காரணமாக இந்தியா - வங்கதேச எல்லையில் பதற்றம் காணப்படுகிறது.
Kolkata: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் இந்தியா – வங்கதேச எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலையில் இந்திய மீனவர்கள் மேற்கு வங்க கடல் பகுதியான பத்மா ஆறு அருகே மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் 2 பேர் திரும்பி வந்து இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் முறையிட்டனர்.
தாங்கள் 3 பேரையும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்ததாகவும்,பின்னர் 2 விடுதலை செய்ததாகவும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, காலை 10.30-க்கு எல்லை பாதுகாப்பு படை கமாண்டர் உள்பட 6 பேர் ரோந்துப் பணியை மேற்கொண்டனர்.
வங்கதேச எல்லை பாதுகாப்பு படையிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள், கைது செய்து வைத்திருந்த மீனவரை விடுவிக்குமாறு வலியுறுத்தினர். இதனை ஏற்காத அவர்கள், இந்திய எல்லை பாதுகாப்பு படையை சுற்றி வளைக்கத் தொடங்கினர்.
நிலைமை சீரியஸ் ஆனதை உணர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், தங்களது இருப்பிடத்திற்கு ரோந்துப் படகில் திரும்பத் தொடங்கினர். அப்போது வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதில் தலைமை காவலர் விஜய் பான் சிங் மற்றும் இன்னொ வீரருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு விஜய் பான் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் வி.கே. ஜோரி, வங்கதேச எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் சபினுல் இஸ்லாமை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்தார். சபினுலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக உறுதி அளித்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இணக்கமான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று நடந்திருக்கும் இந்த சம்பவம் இருதரப்பு உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.