நவம்பர் 28 ஆம் தேதி ம.பி-யில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது
Bhopal: மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, ‘அடுத்து அமைய உள்ள ம.பி அரசில் எங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்' என்று கூறியுள்ளது.
இது குறித்து அம்மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் பிரதீப் அஹிர்வார், ‘நாங்கள் முந்தைய தேர்தல்களில் வென்ற தொகுதிகளைவிட இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். எங்களால் இந்த முறை 32 இடங்களில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்து அமைய உள்ள அரசிற்கு நாங்கள் தலைமை ஏற்கக் கூட வாய்ப்பிருக்கிறது.
காங்கிரஸுக்கோ பாஜக-வுக்கோ மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை கிடைக்காது. எனவே, காங்கிரஸ் எங்களை ஆதரிக்கும். அதனால் ஆட்சி அரியணையில் நாங்கள் ஏறுவோம்.
தற்போது மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் பாஜக-வுக்கு எதிராக மக்களின் எண்ணம் இருக்கிறது. அதனால், இதுவரை இல்லாத அளவில் நாங்கள் வெற்றி வாகைச் சூடி, வரலாறு படைப்போம்.
அடுத்து அமைய உள்ள அரசின் முக்கியப் புள்ளியாக மாயாவதி இருப்பார். முதலில் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க விரும்புகிறோம். அதன் பிறகு மாயாவதியின் வழிகாட்டுதல்படி நாங்கள் செயல்படுவோம்' என்று கூறியுள்ளார்.
மத்திய பிரதசேத்தில் மொத்தம் 230 தொகுதிகள் இருக்கின்றன. வரும் நவம்பர் 28 ஆம் தேதி அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த முறை நடக்க உள்ள தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பகுஜன் சமாஜ், காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் என்று ஆருடம் கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணி குறித்து சுமூகமான முடிவுக்கு இரு கட்சிகளும் வரவில்லை. அதனால் இருவரும் தனித்து நின்று தேர்தலை சந்திக்க இருக்கின்றனர்.
காங்கிரஸுடன், பகுஜன் சமாஜ் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு பாஜக-வுடன் சேர வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.