Budget 2019: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யதுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் இது.
பட்ஜெட்டில், ‘2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிசான் திட்டம் மூலம் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். 3 தவணைகளில் இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குளில் செலுத்தப்படும். கிசான் திட்டம் மூலம் 12.5 கோடி விவசாயிகள் குடும்பம் பயனடையும். டிசம்பர் 2018 முதலே இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசுக்கு 75,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்' என்று அறிவிப்பு வெளியிட்டார் நிதி அமைச்சர் பியூஷ் கோயல். மேலும் அவர், ‘5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது. 6.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் பி.எஃப் உள்ளிட்ட முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரி கிடையாது. இதன் மூலம் 3 கோடி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள்' என்றும் கூறியுள்ளார்.
பட்ஜெட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
'ராஷ்டிரிய காமதேனு ஆயோத் திட்டத்தை மாடுகளை காப்பதற்காக நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்'
'ஏசி அறைகளில் இருக்கும் மிகப் பெரிய குடும்பப் பன்னணியிலிருந்து வந்தவர்களுக்கு சிறிய விவசாயிகளின் நிலைமை குறித்துப் புரியாது'
'நடுத்தர வர்க்க மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன'
'ராணுவத் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது, இந்த நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் பிரதமர் மோடி அரசுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது'
'இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதனால், பல விஷயங்களை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால், அனைத்து குடிமக்களுக்கும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று நினைத்தோம்'
'விவசாயிகள், ஊழியர்கள், நடுத்தர வகுப்பு மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது. 75,000 கோடி ரூபாய் செலவிட்டு பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தை அரசு அமல் செய்யும். கடன் வாங்காத விவசாயிகளுக்கும் இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும்' என்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா
'இந்த பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளால் ஆனது. இந்த பட்ஜெட்டின் ஒரு நல்ல விஷயம் நடுத்தர மக்களுக்கு வரி விலக்கு அறிவித்த நடவடிக்கை. விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு 6,000 ரூபாய் வருமானம் கொடுக்கப்படும் என்றுள்ளார்கள். அது ஒரு மாதத்துக்கு 500 ரூபாயாக இருக்கிறது. இந்த சொற்ப காசை வைத்து விவசாயிகள், கண்ணியத்துடன் வாழ முடியுமா' என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்
சிறிய விவசாயிகள், விளிம்பு நிலை சமூக மக்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் என அனைத்துத் தர குடிமக்களின் நலன்களிலும் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது என்பதை பட்ஜெட் 2019 நிரூபித்துள்ளது: மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் ட்வீட்
மத்திய பட்ஜெட் 2019: நிதிப் பற்றாக்குறை'2018-19-ல் நிதிப் பற்றாக்குறை 3.4% ஜிடிபி-யாக இருக்கும். இது நாம் வைத்த இலக்கான 3.3 சதவிகித்ததை விட சற்று அதிகமாகும்'
பட்ஜெட் 2019: 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது!'5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது. 6.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் பி.எஃப் உள்ளிட்ட முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வரி கிடையாது. இதன் மூலம் 3 கோடி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள்'- பியூஷ் கோயல்
மத்திய பட்ஜெட் 2019: நீர் வளங்கள்'அனைவருக்கும்சுகாதாரமானகுடிநீர்வசதிமற்றும்நிம்மதியானவாழ்க்கையைகொடுப்பதுமத்தியஅரசின்அடிப்படைநோக்கம். மைக்ரோ-நீர்பாசனவசதிகள்மூலம்அதைச்செய்யஉள்ளோம்'
மத்திய பட்ஜெட் 2019: வரி வாங்குதல், கறுப்புப் பணம் ஒழித்தல்'கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. நாங்கள் இதுவரை கறுப்புப் பணத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால் 1.30 லட்சம் கோடி ரூபாய் வெளிவந்துள்ளது'
மத்திய பட்ஜெட் 2019: வடகிழக்கிற்கு ஒதுக்கீடு
'இந்த ஆண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 58,166 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 21 சதவிகிதம் உயர்வு'- நிதி அமைச்சர்
மத்திய பட்ஜெட் 2019: வரி விகிதம்'அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து வரி கணக்குத் தாக்கல்களும் மின்னணு முறையில் மட்டும் செலுத்தும்படி நடைமுறை கொண்டுவரப்படும். 2013-14-ல் நேரடி வரி வருவாய் 6.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது அது கிட்டத்தட்ட 12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது'
மத்திய பட்ஜெட் 2019: சாலை, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு'இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 27 கிலோ மீட்டர் சாலை போடப்பட்டு வருகிறது. பல்லாண்டுகளாக கிடப்பிலிருந்து திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 100 விமான நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆளில்லா தண்டவாள கிராசிங்குகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுள்ளன'
மத்திய பட்ஜெட் 2019:'முதன்முறையாக ராணுவத்திற்கான பட்ஜெட் 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான பிரச்னையை நாங்கள் தீர்த்துள்ளோம். இதற்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்'
மத்திய பட்ஜெட் 2019: பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் கிரமப்புறங்களில் உள்ள 8 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்க இலக்கு வைத்தோம். இதுவரை 6 கோடி இணைப்புகள் தரப்பட்டுள்ளன'- நிதி அமைச்சர்
'ஈ.பி.எஃப்.ஓ (EPFO)-வில் இரண்டு ஆண்டுகளில் இரண்டு கோடி கணக்குள் தொடங்கப்பட்டுள்ளன. இது பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதையே உணர்த்துகிறது. இப்படி நல்ல வளர்ச்சி இருக்கும் இடத்தில் வேலைகள் உருவாக்கப்படும். க்ராடியூட்டி லிமிட் (வரியில்லா வருமான உச்ச வரம்பு) 10 லட்ச ரூபாயிலிருந்து 30 லட்ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 15,000 ரூபாய் வாங்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அமல் செய்யப்படும். 60 வயதில் அவர்கள் ஓய்வெடுத்த பின்னர் 3,000 ரூபாய் பென்ஷன் வரும்படி செய்யப்படும்' - நிதி அமைச்சர்
ராத்ரிய காமதேனு ஆயோக் என்கிற திட்டம் மாடுகளை பாதுகாக்க அமல்படுத்தப்பட உள்ளது: 'கோமாதாவை பாதுகாப்பதிலிருந்து அரசு எப்போதும் பின் வாங்காது'- நிதி அமைச்சர்
'கிசான் திட்டம் மூலம் 12.5 கோடி விவசாயிகள் குடும்பம் பயனடையும். டிசம்பர் 2018 முதலே இந்தத் திட்டம் அமலுக்கு வரும். இதனால் மத்திய அரசுக்கு 75,000 கோடி ரூபாய் செலவு ஏற்படும்'- நிதி அமைச்சர் கோயல்
'கிசான் திட்டம் என்ற மிகப் பெரிய திட்டத்துக்கு பிரதமர் மோடி ப்ளான் செய்து வருகிறார். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அந்தத் திட்டம் மூலம் 6,000 ரூபாய் வரை கிடைக்கும். 3 தவணைகளில் இந்தத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குளில் செலுத்தப்படும்'- நிதி அமைச்சர் கோயல்
'2014 ஆம் ஆண்டு 2.5 கோடி மக்களுக்கு மின்சார வசதி இல்லாமல் இருந்தனர். நாங்கள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொடுத்துள்ளோம். நாங்கள், உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை கொண்டுவந்துள்ளோம் அதன் மூலம் இதுவரை 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்'- நிதி அமைச்சர் கோயல்
'தேசத்தின் வளங்கள் ஏழைகளுக்குத்தான் முதலில் கொடுக்கப்பட வேண்டும். 60,000 கோடி ரூபாய் MNREGA திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இன்னும் அதிகமான நிதி ஒதுக்கப்படும்'- நிதி அமைச்சர் கோயல்
காலை 10:25 - வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் வேலை வாய்ப்பின்மையை குறைக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்று நீத்தி ஆயோக் தெரிவித்துள்ளது.
காலை 10:23 - பிரதமர் மோடி வருகை இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளார்.
காலை 10:19 - பட்ஜெட்டை தாக்கல் செய்ய பியூஷ் கோயல் வருகை பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். சிவப்பு வண்ணம் கொண்ட சூட்கேஸில் பட்ஜெட் உரை வைக்கப்பட்டுள்ளது. அதனை காட்டியவாறு நாடாளுமன்றத்திற்கு உள்ளே சென்றார்.
காலை 10:14 - சிசிடிவி கேமராக்கள் முதல் வை-ஃபை அமைப்பது வரை பல்வேறு வசதிகள் ரயில்வேயில் செய்து தரப்பட உள்ளது. இதனால் ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
காலை 09:47 - வருமான வரித்துறை அலுவலகம் இந்த படத்தை ட்வீட் செய்துள்ளது. தனது துறை அதிகாரிகளுடன் உற்சாகத்துடன் காணப்படுகிறார் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் பியூஷ் கோயல்.
காலை 09:37 - விவசாயிகளுக்கு சலுகை வழங்கும் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல். அவர்களின் நலனுக்காக கொள்கைகள் வகுக்கப்படலாம். நாட்டின் உணவுக்கிண்ணம் என கருதப்படும் பஞ்சாப் மாநிலத்தில் உணவு உற்பத்தி அதிகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பூச்சிகளின் தாக்குதலால் அங்கு அறுவடை பாதித்திருக்கிறது. மற்ற பேரிடர் பாதிப்புகளால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.
காலை 09:34 - இடைக்கால பட்ஜெட்டில் வரி குறித்த மாற்றங்களை செய்தவர் ப.சிதம்பரம். கடந்த 2014 பிப்ரவரி 17-ம்தேதி அவர் இடைக்கால பட்ஜெட் செய்தார். அன்றைய தேதியில் பொருளாதார பிரச்னைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக சிதம்பரம் கூறியுள்ளார்.
காலை 09:23 - பட்ஜெட்டையொட்டி பங்குச் சந்தையில் ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், பாரதி இன்ஃப்ராடெல், பவர் கிரிட் மற்றும் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. வேதாந்தா, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் சன் ஃபார்மாவின் பங்குகள் சரிந்துள்ளன.
காலை 09:22 - மத்திய பட்ஜெட் 2019: நாடாளுமன்றத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் திறந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் உரையை வாசிப்பார். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை பியூஷ் கோயல் தொடங்குவார்
காலை 09:15 - கிராம மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கிராம மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரூ. 1.3 லட்சம் கோடி வரைக்கும் ஒதுக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இடைக்கால பட்ஜெட்டா இருந்தபோதிலும், பொருளாதார வளர்ச்சியை 7.5 சதவீதம் அளவுக்கு உயர்த்தும் வகையில் அறிவிப்புகள் இதில் வெளியாகலாம். ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றுக்கு 7-8 சதவீதம் வரைக்கும் கூடுதல் முதலீடு ஒதுக்கப்படலாம். இவற்றின் மூலம் வருவாய் 15 சதவீதம் அளவுக்கு உயர்த்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம்.
காலை 08:53 - பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின பட்ஜெட் நாள் என்பதால் பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 43.5 புள்ளிகள் அல்லது 0.4 சதவீதம் உயர்ந்து 10,898.55 புள்ளிகளாக இருந்தது.
காலை 08:48 - நிதித்துறை அமைச்சக அலுவலகத்திற்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் பியூஷ் கோயல் வந்துள்ளார். இன்றைய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை 07:33 - ரயில்வே பட்ஜெட்டில் அதிகவே ரயில்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். பரபரப்பாக இயங்கும் ரயில் தடங்களில் அதிவேக ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில்தடங்களில் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.