This Article is From Feb 01, 2020

பொருளாதார மந்தநிலைக்கு இடையில் இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்: 10 தகவல்கள்!

Budget 2020: மத்திய அரசு, தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை தளர்த்த வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

Budget 2020: இன்றைய பட்ஜெட் தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கிய்யத்துவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

New Delhi:

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்தியாவின் நுகர்வை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் அவர் தெரிவிக்க உள்ள அறிவிப்புகள் குறித்து உன்னிப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன. 2008-09 நிதி ஆண்டிற்குப் பின்னர் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம், தனிப்பட்ட வரிகளில் சலுகை உள்ளிட்டவைகள் குறித்த அறிவிக்கப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

1.இன்று 11 மணிக்குத் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிராமப்புற நுகர்வை அதிகரிக்கவும், வரி குறைப்புகளை தெரிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

2.மத்திய அரசு, தனது நிதிப் பற்றாக்குறை இலக்கை தளர்த்த வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. வருவாய் ஈட்டலில் சுணக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப்படுகிறது. 

3.இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 5 காலாண்டுகளாக வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிகக் குறைந்தபட்சமாக 4.5 சதவிகிதமாக ஜிடிபி வளர்ச்சி குறைந்தது. 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவே குறைந்த ஜிடிபி வளர்ச்சியாகும்.

4.விலைவாசி உயர்வுக்கு வித்திடும் நுகர்வோர் பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது. காய்கறிகள், குறிப்பாக வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளது. 

5.வேலைவாய்ப்பு, பணவீக்கம், வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றை எதிரொலிக்கும் நுகர்வோர் நம்பிக்கையானது 2014 ஆம் ஆண்டு இருந்ததைவிட குறைவாக உள்ளது. 

6.முன்னரே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்புகளுக்கு 105 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டினை அறிவித்திருந்தார். இதற்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்படலாம். இந்த அறிவிப்பானது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் சந்தையாக மாற்ற உதவும். 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்றதில் இருந்து, சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்து வருகிறார்.

7.இன்றைய பட்ஜெட் தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கிய்யத்துவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லட்சம் கோடி முதலீடுகளைத் திரும்பப் பெறுவது இதில் அடங்கும். ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு முன்னரே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

8.வங்கித் துறையை ஸ்திரப்படுத்த சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து வங்கித் துறை சிக்கலில் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

9.வங்கித் துறை சுணக்கத்தை சரி செய்ய எச்டிஎப்சி நிறுவனம், புதிய யோசனையை முன் மொழிந்துள்ளது. 

10.தற்போதைய நிதி ஆண்டில், ஜிடிபி வளர்ச்சி வெறும் 5 சதவிகிதம் மட்டுமே இருக்கும் நிலையில், 2021 மார்ச் இறுதிக்குள் இது 6 முதல் 6.5 சதவிகித வளர்ச்சியைக் காணும் என்று மத்திய அரசால் கணிக்கப்படுகிறது.  

.