தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்ச நல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறள் மற்றும் அவ்வையாரின் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி உரை நிகழ்த்தினார். திருக்குறளின் வழியில் மத்திய பாஜக அரசு செயல்படுவதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருட்பாலில் நாடு என்ற அதிகாரத்தில் வரும் 738-வது குறளான,
''பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.''
என்பதை சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினார். இந்த குறளுக்கு நோய் இல்லாமை, நல்ல பொருளாதார வளம், விளைச்சல் வளம் மிக்க இருத்தல் , இன்பமான வாழ்வு , பாதுகாப்பான சூழல் என இந்த ஐந்து குணங்களே ஒரு நாட்டிற்கு அழ என்பது பொருளாகும்.
அந்தவகையில் பிணியின்மையான நோய் இல்லாமைக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. செல்வத்திற்கு மத்திய அரசின் சொத்து உருவாக்கம், விளைவின்பம் என்பது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், ஏமம் என்பது நாட்டின் பாதுகாப்பு என திருக்குறள் காட்டும் வழியில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
இதேபோன்று அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியையும் பட்ஜெட் உரையில் அவர் மேற்கோள் காட்டினார். 'பூமி திருத்தி உண்' என்ற ஆத்திச்சூடி வாசகத்தை குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், இதற்கு விவசாய நிலத்தை உழுது அதில் பயிர் செய்ய வேண்டும் என்பது பொருள் என்றும், இதற்கு முக்கியத்துவம் அளித்து மோடி அரசு செயல்படுவதாகவும் பேசினார்.
திருக்குறள், ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பேசியதற்கு அவை உறுப்பினர்கள் ஆரவாரம் எழுப்பி வரவேற்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆதிச்ச நல்லூரில் தனித்துவம் மிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.