மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
New Delhi: தனி நபருக்கான வருமான வரியை குறைத்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் முதல் 7.5 லட்ச ரூபாய் வரை இருப்பவர்கள் இதுவரையில் 20 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வந்தனர். இது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 7.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெற்றவர்கள் செலுத்தி வந்த 20 சதவீத வரி தற்போது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரி 20 சதவீதமாகவும், ரூ. 12.5 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரி தற்போது 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் உடையவர்கள் செலுத்தி வந்த 30 சதவீத வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உடையவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பிலும் மாற்றம் கொண்டுவரப்படவில்லை.