"சீக்கிரமே இந்தியாவும் விற்பனைக்கு வரும். அதையும் யாராவது கருணை பார்த்து டெண்டர் எடுக்க வேண்டும்."
Budget 2020: நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட 2020 - 21 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து கேலியாக பேசி விமர்சித்துள்ளார்.
கூட்டத்தில் சீமான், “ஜல் சல் திட்டமென்ற ஒன்றை அறிவித்துள்ளார்கள். அதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. இன்னொருத் திட்டத்திற்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு, 2 லட்சம் கோடி ஒதுக்கீடு என்று எல்லாவற்றுக்கும் ஒதுக்கீடு செய்து கொண்டே போவார்கள். எதவும் நமக்கு வராது. அதான் முன்னரே அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு விட்டார்களே. பிறகு எப்படி அது நமக்கு வரும்.
அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் விற்பனைக்கு என்று அறிவித்துவிட்டார்கள். எல்ஐசி விற்பனைக்கு, இந்திய ஏர்லைன்ஸ் விற்பனைக்கு… யாரிடமாவது காசு, பணம் இருந்தால், அதை வாங்கிப் போடுங்கள். பிற்காலத்தில் உங்களுக்குப் பயன்படும். சீக்கிரமே இந்தியாவும் விற்பனைக்கு வரும். அதையும் யாராவது கருணை பார்த்து டெண்டர் எடுக்க வேண்டும்.
உலகின் ஆகச்சிறந்த அறிவாளிகள் தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனத்தை விற்க ஒரு பக்கம் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், 100 விமான நிலையங்களைக் கட்ட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அப்படியென்றால் விமான நிலையம் யாருக்காக கட்டப்படுகிறது. அந்த விமான நிலையங்களில் நாங்கள் என்ன ஓடிப் பிடித்தா விளையாடப் போகிறோம்,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.