This Article is From Feb 11, 2020

“எல்லாரும் கேலி செய்றாங்க…”- மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட திருமா!!

"தற்போது நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் ஜிடிபி, 4.5 சதவிகித வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது என்று அரசு தரவுகள் சொல்கின்றன."

“எல்லாரும் கேலி செய்றாங்க…”- மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட திருமா!!

"அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் விற்று நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கப் பார்க்கிறது மத்திய அரசு"

மத்திய பட்ஜெட் 2020 சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் குறித்தான விவாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்து வருகிறது. விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் பற்றி தங்களது கருத்துகளையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.

அவர், “மத்திய பட்ஜெட்டை சுமார் 3 மணி நேரம் வாசித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரின் பேச்சாற்றலை நான் பாராட்டினாலும், இந்த பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது. தலித்துகளுக்கு எதிராக, சிறுபான்மையினருக்கு எதிராக, பழங்குடியினருக்கு எதிராகவே இந்த பட்ஜெட் இருக்கிறது. 

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் ஜிடிபி, 4.5 சதவிகித வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது என்று அரசு தரவுகள் சொல்கின்றன. ஆனால் மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன், ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2.5 சதவிகிதம்தான். ஆனால், அது திரித்துக் கூறப்படுவதாக சொல்கிறார். அப்படியென்றால், உண்மை நிலை இன்னும் மோசமாக இருப்பதையே இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. 

மேலும் இன்னும் ஓராண்டில் நாட்டின் ஜிடிபி இரட்டிப்பாக ஆக்கப்படும் என்றும், ஜிடிபி 10 சதவிகித வளர்ச்சியைப் பெறும் என்றும் அரசு தரப்பு சொல்கிறது. ஆனால், உண்மை நிலையை சற்றும் இந்த கூற்று பிரதிபலிக்கவில்லை. இப்படி நிதி அமைச்சர் சொல்வதைப் பார்த்து பொருளாதார வல்லுநர்கள் கேலி செய்கின்றனர். நகைச்சுவைப் பொருளாகவே பட்ஜெட்டைப் பார்க்கின்றனர். அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களையும் விற்று நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கப் பார்க்கிறது மத்திய அரசு,” என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி உரையை நிறைவு செய்தார் திருமாவளவன். 

.