2019 - 20ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் காதிலே பூ என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்
இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று கூறியதாவது, "மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசு எந்தளவுக்குத் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதை அவர்கள் தயவில் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமாக பட்ஜெட் அமைந்துள்ளது.
மேலும் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் திட்டத்தை இவர்கள் ஒப்புக்கொண்டதால் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக தமிழகத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களையும், நிதியையும் பெற்று வருகிறோம் என்று தமிழக அரசும், அமைச்சர்கள் சிலரும் கூறிவருவது எவ்வளவு பெரிய மோசடி என்பதை அவர்களே இந்த பட்ஜெட்டின் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்கள்.
எனினும், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், விவசாயிகளுக்கு சில திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்திருப்பதும் சிறு ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சிதான்.
ஏற்கெனவே கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழக அரசின் கடன் இப்போது 3 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கழுத்தை நெறிக்கும் இந்த கடன்களுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்படுகிறது. எனவே ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் பட்ஜெட்டில் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.