ஹைலைட்ஸ்
- டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- ஒரு மர்மமான கடிதக் குறிப்பு போலீஸுக்குக் கிடைத்தது
- கொலை வழக்காக போலீஸ் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது
New Delhi: டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் இருக்கும் பாட்டியா குடும்பத்தில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள விவகாரத்தில் தற்போது பிரேசப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதன்படி, 11 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று போலீஸ் பாட்டியா குடும்பத்தின் வீட்டில் சென்று பார்த்த போது, 11 பேரின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. மர்மமான முறையில் 9 பேரின் உடல்கள் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார். 11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸ் விசாரணையின் போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் இரண்டு டயரிகள் கிடைத்துள்ளன. மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸாருக்குக் கிடைத்த குறிப்புகள் வைத்து யூகிக்க முடிகிறது.
காகிதக் குறிப்பில், ‘மனித உடல் தற்காலிகமானது. இந்த பயத்தைப் போக்க கை, வாயை மூடிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல டயரிகளிலும், ‘பாத் பூஜா’ குறித்த குறிப்புகள் இருந்துள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸ், இந்த விவகாரம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து குடும்ப அங்கத்தினரான சுஜாதா பாட்டியா, 'எனது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர். யாரோ என் குடும்பத்தினரை கொலை செய்துள்ளனர் போலீஸ் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
இறந்த 11 பேரில், 33 வயது பிரியங்கா என்ற பெண்ணுக்கு சென்ற மாதம் தான் திருமண நிச்சயம் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அவருக்குத் திருமணம் நடக்க இருந்தது.
முதலில் மூத்த குடும்ப உறுப்பினரான 77 வயதாகும் நாராயண் தேவியை யாரோ கழுத்து நெறித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இறுதி பிரேத பரிசோதனையில் அனைவரும் தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.