This Article is From Jul 04, 2018

டெல்லியில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பகீர் தகவல்கள்!

பாட்டியா குடும்பம் எப்படி இந்த தற்கொலைக்கு திட்டமிட்டது என்பது குறித்த தகவல்கள் என்.டி.டி.வி-க்கு எக்ஸ்குளூசிவாக கிடைத்துள்ளது.

New Delhi:

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் இருக்கும் பாட்டியா குடும்பத்தில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்டியா குடும்பம் எப்படி இந்த தற்கொலைக்கு திட்டமிட்டது என்பது குறித்த தகவல்கள் என்.டி.டி.வி-க்கு எக்ஸ்குளூசிவாக கிடைத்துள்ளது.

பாட்டியா குடும்பம் இருந்த வீட்டின் எதிரிலிருந்து வீடியோ காட்சிகள் மூலம் அவர்கள், எப்படி இந்த தற்கொலைக்கு பிளான் செய்தார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் போலீஸ் பாட்டியா குடும்பத்தின் வீட்டில் சென்று பார்த்த போது, 11 பேரின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. மர்மமான முறையில் 9 பேரின் உடல்கள் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார். 11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  

இதையடுத்து, போலீஸ் விசாரணையின் போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் பல டயரிகள் கிடைத்துள்ளன. மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸாருக்குக் கிடைத்த குறிப்புகள் வைத்து யூகிக்க முடிந்தது.

காகிதக் குறிப்பில், ‘மனித உடல் தற்காலிகமானது. இந்த பயத்தைப் போக்க கை, வாயை மூடிக்கொள்ள வேண்டும்’ என்று எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல டயரிகளிலும், ‘பாத் பூஜா’ குறித்த குறிப்புகள் இருந்துள்ளன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாட்டியா குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘முக்தியடையும்’ நோக்கில் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. போலீஸ், இந்த விவகாரம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், பிரேத பரிசோதனையில் அனைவரும் தற்கொலை செய்து கொண்டுது உறுதி செய்யப்பட்டது. 

நாரயண் தேவி என்கின்ற 77 வயது நிரம்பிய மூதாட்டி தான் குடும்பத்தில் மூத்தவராக இருந்துள்ளார். அவரின் இளைய மகன் லலித் சுந்தாவத் கூறுவதைத் தான் குடும்பம் மொத்தமும் பின்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பாட்டியா குடும்பம் வசித்திருந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட டயரி குறிப்புகள் அவருடையது என்பது தெரியவந்துள்ளது. லலித்தின் இறந்த தந்தை, முக்தியடைவது குறித்து அவரிடம் கூறியதாக டயரி குறிப்புகள் இருக்கின்றன. 33 வயதாகும் பிரியங்கா என்ற இன்னொரு குடும்ப உறுப்பினரும் டயரியில் குறிப்பெழுதியுள்ளார். அவருக்கு ஜூன் 17 ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. 

டயரி குறிப்புகளை வைத்துப் பார்க்கும் போது மொத்த குடும்பமும், லலித்தின் தந்தை வந்து அவர்களை காப்பாற்றி விடுவார் என்று நம்பியுள்ளது. 

சிசிடிவி காட்சிகளில், குடும்பத்தில் மிகவும் சிறியவர்களான12 வயது துருவ் மற்றும் 15 வயது சிவம் ஆகியோர், வீட்டுக்குக் கீழே இருக்கும் ஃபர்னிச்சர் கடையில் தற்கொலைக்குத் தேவையான ஸ்டூல் மற்றும் கயிறு போன்றவற்றை வாங்கி வருவது தெரியவந்துள்ளது. 

ஜூன் 30 ஆம் தேதி தான் கடைசியாக டயரி குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. அந்த நாள் எழுதப்பட்ட குறிப்பில், ‘கடவுளை நோக்கி செல்லும் பாதை’ என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. 

அந்த குறிப்புகளில் சடங்குக்கு சரியாக எந்த நேரத்தில் எதை எதை செய்ய வேண்டும் என்பது தெளிவாக எழுதப்பட்டுள்ளது. 

இரவு,

10 மணி- சடங்குக்குத் தேவையான ஸ்டூல் எடுத்துவரப்படுகிறது

10:15: துருவம் மற்றும் சிவம், சடங்குக்குத் தேவையான கயிறுகளை கொண்டு வருகின்றனர்

10:39: குடும்பம் ஆர்டர் செய்த 20 ரொட்டிகள் டெலிவரி செய்யப்படுகின்றன

10:57: நாராயண் தேவியின் மூத்த மகன் புவனேஷ் நாயை வாக்கிங் அழைத்துச் செல்கிறார்

11:04: புவனேஷும் நாயும் வீட்டுக்கு உள்ளே செல்கின்றனர்

காலை 5:56: பால் வீட்டுக்கு முன் போடப்படுகிறது

7:14: பக்குத்து வீட்டுக்காரர் பாட்டியா குடும்பம் இருக்கும் வீட்டிற்குள் நுழைந்து அனைவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வெளியாள் யாராவது அனைவரையும் கொன்றனரா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், பிரேத பரிசோதனை அனைவரும் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கொலை வழக்காக போலீஸ் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், இப்போது மொத்த குடும்பத்துக்கு உளவியல் ரீதியாக ஏதாவது சிக்கல் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணையை மாற்றியுள்ளனர் போலீஸார்.
 

.