This Article is From Jul 30, 2020

ஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

ஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!

ஆகஸ்டிலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது; இ-பாஸ் நடைமுறை தொடரும்! - லாக்டவுன் முழு விவரம்!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்திலும் பேருந்துகள், ரயில்கள் இயங்காது என்றும், தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறைப்படி  இ-பாஸ் பெற வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.

தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடிக்கிறது. 

மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து. மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

.