பஞ்சாப் நேஷனல் பேங்க் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்சி
New Delhi: புதுடெல்லி: வெளிநாடு தப்பிச் சென்றுள்ள மெகுல் சோக்சி சட்ட விரோதமான முறையில் இந்திய மற்றும் ஆன்டிகுவா பாஸ்போர்ட்களை வைத்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் பேங்கில் இருந்து 13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன்பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த மெகுல் சோக்சி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டநிலையில், அவர்களின் பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியுள்ளது. முன்னதாக கரீபியன் தீவுகளில் இருக்கும் ஆன்டிகுவா தீவில் கடந்த ஜனவரி 15-ந்தேதி சோக்சி குடியுரிமையை பெற்றார். ஆனால் அவரது மோசடி குறித்த விவரங்கள் ஜனவரி 29-ம்தேதிதான் தெரிய வந்த்து.
இந்த நிலையில் இந்திய மற்றும் ஆன்டிகுவா பாஸ்போர்ட்களை சோக்சி சட்டவிரோதமாக வைத்துள்ளார் என்று மத்திய அமலாக்கத்துறை கூறியுள்ளது.
‘மெகுல் சோக்சி இரு நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்துள்ளார். ஆனால் இந்திய சட்டப்படி இரட்டை குடியுரிமை செல்லுபடியாகாது. இந்தியாவில் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி விட்டோம். இந்தியா வர அவர் விரும்பினால் ஆன்டிகுவா பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வரலாம். ஆன்டிகுவா பாஸ்போர்ட் இல்லாவிட்டாலும் எமர்ஜென்சி டாக்குமெண்டுகளை பயன்படுத்தி அவர் இந்தியா வர முடியும்” என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.