ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒரு கிலோ வெங்காயம் வழங்குவதாக மொபைல் கடை ஒன்று அறிவித்துள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வு ஒரு பக்கம் இருந்தாலும், அதன் மூலம் மற்ற பொருட்களை மார்க்கெட்டிங் செய்யும் புதுமையும் வரத்தான் செய்கின்றன. தமிழகத்தை சேர்ந்த மொபைல் கடை ஒன்று, வாங்கும் ஒவ்வொரு செல்போனுக்கும் ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
பட்டுக்கோட்டையில் எஸ்.டி.ஆர். மொபைல் மற்றும் சர்வீஸ் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைதான் மொபைல் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் என அறிவித்திருக்கிறது.
கடந்தசில நாட்களாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை விண்ணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் கிலோ வெங்காயம் ரூ. 180- வரையில் விற்பனையானது.
தனது கடையின் ஆஃபர் குறித்து எஸ்.டி.ஆர். கடை உரிமையாளர் சரவணக்குமார் கூறுகையில், 'வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு எனது கடையை இன்னும் விளம்பரப்படுத்த உதவும். கடந்த வாரம்தான் இந்த திட்டத்தை எனது கடையில் அறிமுகம் செய்தேன். இதனால் எனது வாடிக்கையாளர்கள் கணிசமாக அதிகரித்துள்ளனர்.
வழக்கமாக 3 முதல் 4 செல்போன்கள்தான் எனது கடையில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும். ஆனால் இலவச வெங்காயம் அறிவிப்புக்கு பின்னர் மொபைல் விற்பனை நாள் ஒன்றுக்கு 10 வரையில் அதிகரித்திருக்கிறது. எனது கடையில் உள்ள வெங்காயத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம்' என்றார்.
பருவம் தவறிய மழைப்பொழிவால் வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்சுகள் குவிந்துள்ளன.
வார இறுதியில் திருமணம் முடித்த இளம் ஜோடிக்கு பரிசாக வெங்காய பூங்கொத்து வழங்கப்பட்டது. இன்னும் 2 வாரங்களில் வெங்காய விலை உயர்வு கட்டுக்குள் வரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.