This Article is From Apr 09, 2019

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கும் மே-19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே.19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கும் மே-19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால், இதில் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த 4 தொகுதிக்கான இடைத்தேர்தலையும் சேர்த்தே நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும் மே-19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 22ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல்-29ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்ப பெற மே-2 கடைசி நாள் ஆகும். தொடர்ந்து, மே 23ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

.