இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்து விட முடியாது: மு.க.ஸ்டாலின்
இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்து விட முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து விரோத கட்சி எனக்கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்து விட முடியாது. மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சமூக வலைதளங்களில் இதுபோல பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று - நேற்றல்ல; நூற்றாண்டு கடந்து வீறுநடைபோடும் திராவிட இயக்கம் தனது தொடக்கக் காலத்திலிருந்தே இத்தகையச் சதிகளை முறியடித்து வென்றிருக்கிறது. தி.மு.கழகம் எனும் அரசியல் பேரியக்கம் எத்தனையோ பழிகளை - சதிகளை - அவதூறுகளை எதிர்கொண்டு தகர்த்து தவிடுபொடியாக்கி தனது இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தந்தை பெரியார் முன்வைத்த சமூகநீதி - சுயமரியாதைக் கொள்கையை தேர்தல் ஜனநாயக அரசியல் வழியில் அனைத்துத்தரப்பு மக்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்துவதே பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடாகும். இதில் எந்த மதத்தின் மீதும் திமுகவுக்கு வெறுப்பு கிடையாது. பல மதத்தினரும் திமுகழகத்தில் அங்கம் வகிக்கிறார்கள், தம் மதம் - சாதி மறந்து!
பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் இத்தகைய சதிவேலைகளைச் செய்தபடியே, பெரும்பான்மை இந்து மக்களின் எதிர்கால வெளிச்சத்தை இருட்டாக்கிடும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்திடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
எங்கோ - எதுவோ ஒன்று நடந்தாலும், அதனைத் தொடர்புபடுத்தி, திமுக மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள்.
மாநிலத்தை ஆளும் அடிமை ஆட்சியாளர்கள், திமுகவை தமிழர்க்களின் எதிரியாக சித்தரிக்க நினைக்கும் திடீர் அரசியல் நகைச்சுவையாளர்கள் என அவர்களின் கூட்டத்தில் எடுபிடிகள் ஏவல் செய்வோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
சமூகவலைதள யுகத்தில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் கருத்துகள் எளிதில் சென்று சேருவதால் அதனை கவனிக்கக்கூடிய திமுகவினர் சிலர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் போக்குத் தெரிகிறது. அதனைக் கைவிடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.