தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட எச்.ராஜா பேசியதாவது, மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழலை கவனிக்க விரைவு நீதிமன்றங்கள் உள்ளதால், தமிழகத்தில் மத்திய சென்னை, சிவகங்கை, நிலகிரி, தூத்துக்குடி ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி.
தமிழகத்தில் இந்தி திணிப்பு என கூறும் திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர்கல்வி ஏன் இல்லை? மீண்டும் இந்தி திணிப்பு என்று ஸ்டாலின் விமர்சித்தால், திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை பாஜக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களம் கண்டார். தேர்தல் முடிவில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் கனிமொழியின் வேட்புமனுவில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும், அதனைச் சுட்டிக்காட்டிய பின்னரும் கூட புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் தமிழிசை தனது மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
இதேபோல், நிலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிவகங்கை தொகுதயில் பாஜக சார்பில் எச்.ராஜா போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் காங்கிரஸ் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதேபோல, தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்துள்ளார்.
அதில், ‘ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். இந்த இரு வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.