This Article is From Jan 07, 2019

‘நான் பேசினேன், தாங்கமாட்டாய்…’- தினகரனை சீறும் சி.வி.சண்முகம்

இது மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இது சரியில்லை

‘நான் பேசினேன், தாங்கமாட்டாய்…’- தினகரனை சீறும் சி.வி.சண்முகம்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது உறுதி என்று சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம். தொடர்ந்து அவர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இதற்கு, ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பேட்டியளித்த சண்முகம், டிடிவி தினகரனை கடுமையாக சாடினார்.

அமைச்சர் சண்முகம் பேசுகையில், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான் ஒருவர் மீது சந்தேகம் கிளப்பினால், அதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஒரு திருடன், இன்னொருவனுக்கு சாட்சி சொல்கிறான். டிடிவி தினகரன், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான். உனக்கு மட்டும்தான் வாய் இருக்கிறதென்று நினைக்காதே. நாங்கள் பேசினால் நீ தாங்கமாட்டாய். மரியாதையாக பேசக் கற்றுக் கொள். உன் ஆட்டம் பாட்டமெல்லாம் உன்னுடைய உள்ளாச பங்களாவில் வைத்துக் கொள். எனக்கும் உன்னைவிட அதிகமாக பேசத் தெரியும்' என்று கொதித்தார்.

அவர் தொடர்ந்து, ‘அம்மாவுடைய தொண்டன் என்ற முறையில்தான் நான் சிலர் மீது கேள்விகளை எழுப்பினேன். அதற்கு முறையான பதில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அமைச்சர், அரசு உயர் அதிகாரியை கேள்வி கேடகலாமா என்று கருத்து தெரிவிக்கிறார்கள். குற்றச்சாட்டு என்று வந்துவிட்டால், யாரை வேண்டுமானால் கேள்வி கேட்கலாம். அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நீதிமன்றப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட கேள்விக்கு உட்படுத்தப்படலாம். கேள்வியே கேட்கக் கூடாது என்று சொல்ல இது ஒன்றும் ஹிட்லர் ஆட்சியல்ல. அமைச்சர்களை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இது சரியில்லை' என்று முடித்துக் கொண்டார்.

.