This Article is From Dec 18, 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 60 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Jamia Protests: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், அசாமில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அசோம் கானா பரிஷாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Jamia Protests: டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணி வன்முறையில் முடிந்தது.

New Delhi:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 60 மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், அசாமில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அசோம் கானா பரிஷாத் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.காவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் இந்த அமர்வில் உள்ள மற்ற நீதிபதிகள் ஆவர். 

இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர் தங்கள் சொந்த நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொண்ட காரணத்தினால், இந்தியாவுக்குள் 2014 வரை குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

குடியுரிமை வழங்குவதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிய சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை மதத்தின் அடிப்படையில் குடிமக்களாக ஒப்புக்கொள்வது வாழ்க்கை மற்றும் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

இந்த சட்டத்திருத்தமானது, தேசத்தின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கையை பாதிக்கிறது. அனைத்து மதங்களின் உறுப்பினர்களுக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்று மனுதார்கள் குறிப்பிட்டுள்ளனர். 

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டு வந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்டத் திருத்தத்தில் கையெழுத்திட்டு சட்டம் அமலுக்கும் வந்தது. 

இதனிடையே, குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 

இதனால், பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கதல் நடத்தினர். கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி அவர்களை விரட்டி அடித்தனர். இதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்த தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 

இதனிடையே, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன் மற்றும் பஞ்சாபில் அமரீந்தர் சிங் ஆகிய மூன்று மாநில முதல்வர்கள் குடியுரிமைச் திருத்த சட்டத்தை, தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

.