மகாராஷ்டிர சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
Mumbai: ஒரு கட்சி ஆளும் மாநிலங்கள்தான் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக மகாராஷ்டி துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார். கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து நேற்று மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம்,ராஜஸ்தான் மாநிலங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. ஏனென்றால் இந்த மாநிலங்களிலெல்லாம் ஒரே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. நம்முடைய முதல்வர் உத்தவ் தாக்கரே குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவைகளால் மாநில மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு நாங்களும் உடன்படுகிறோம்.
இவ்வாறு அஜித் பவார் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றியது.
கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம்தேதி என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர், மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு 2015-க்கு முன்பு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டம் அவர்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.