This Article is From Dec 26, 2019

''8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அவற்றை சந்திக்க தயார்'' - மு.க.ஸ்டாலின் சவால்!!

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக தலைமையில் பேரணி கடந்த திங்களன்று நடைபெற்றது. அனுமதி பெறாமல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

8 ஆயிரம் பேர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

8 ஆயிரம் வழக்குகள் போற்றாலும் அவற்றை சந்திக்க தயார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ள சூழலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் கடந்த திங்களன்று போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். 

போலீசார் அனுமதி அளிக்காத இந்த போராட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, வைகோ உள்ளிட்டோரும், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். 

Advertisement

அரசியல் தலைவர்களை தவிர்த்து அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வர்த்தகர்களும் அமைதியான முறையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரம் போலீசார், கலவர தடுப்பு வாகனங்கள் உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 

Advertisement

இந்தநிலையில், அனுமதியின்றி நடைபெற்ற இந்த போராட்டத்தில் பங்கேற்ற 8 ஆயிரம் பேர் மீது, சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், 'எப்போதுமே அரசுக்கு கணக்கு கொடுக்ககூடியவர்கள், அதில் பாதியாக குறைத்துத்தான் தருவார்கள். எதிர்க்கட்சிகள் நடத்துகிற ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், பேரணியாக இருந்தாலும் எண்ணிக்கையை குறைத்துத்தான் தருவார்கள். ஆக, எது எப்படி இருந்தாலும் 8 ஆயிரம் வழக்குகள் போட்டாலும் கூட அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்' என்றார்.

Advertisement