"இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்போது பாதுகாப்பில் இருந்த போலீஸ் தரப்புக்கும் பல்கலைக்கழகத் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளேன்"
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், சில நாட்களுக்கு முன்னர் நடந்த 27வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கேரளாவைச் சேர்ந்தவர் மாணவி ராபிகா அப்துரேஹிம், மாஸ் கம்யூனிகேஷில் முதுகலைப்படிப்பை முடித்துள்ள இவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவி ராபிகா கூறும்போது, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பட்டமளிப்பு விழா துவங்கும் முன்பு விழா அரங்கத்தில் இருந்து தன்னை வெளியேற்றியதாகவும், தொடர்ந்து குடியரசுத்தலைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சென்ற பிறகே அரங்கத்திற்குள் தான் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
எதற்காக அந்த போலீஸ் அதிகாரி தன்னை அரங்கத்தில் இருந்து வெளியேற்றினார் என்ற காரணம் தனக்கு தெரியவில்லை என்றார் மாணவி ராபிகா. தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ஏற்க மறுத்த மாணவி, பட்டமளிப்பு சான்றிதழை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளார்.
முன்னதாக மாணவி ராபிகா ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தினால்தான், குடியரசுத் தலைவர் வந்தபோது அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவரின் அழைப்பின் பேரில் நான் கலந்து கொண்டேன். அப்போது இச்சம்பவம் நடந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அந்த மாணவிக்கு நடந்தது அவமரியாதை என்பதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அப்போது பாதுகாப்பில் இருந்த போலீஸ் தரப்புக்கும் பல்கலைக்கழகத் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளேன்,” என்று கூறியுள்ளார்.