CAA Protest: இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.
ஹைலைட்ஸ்
- ராகுல், மன்மோகனை விமர்சித்துள்ளார் அமித்ஷா
- இமாச்சல பிரதேசப் பேரணியில் அமித்ஷா அதிரடி பேச்சு
- ராகுல் காந்திக்கும், வெளிப்படையாக சவால் விட்டுள்ளார் அமித்ஷா
New Delhi: குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், மக்களை தவறான பாதையில் வழி நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேலும் அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டமான சிஏஏ மட்டுமல்லாமல், தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உள்ளிட்டவை குறித்தும் எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. முஸ்லிம்களை குறிவைக்க இந்த நடவடிக்கைகள் பயன்படுத்தப்படும் என்று குற்றம் சுமத்தப்படும் நிலையில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் அமித்ஷா.
“நாட்டில் வாழும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. குடியுரிமைச் சட்டம் மூலம் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது,” என்று இமாச்சல பிரதேச மாநில சிம்லாவில் நடந்த பேரணியில் பேசினார் அமித்ஷா.
மேலும் அவர், “நான் ராகுல் காந்திக்கு சவால் விடுகிறேன். குடியுரிமையைப் பறிக்கும் வகையில் சட்டத்தில் ஒரு பிரிவு இருப்பதை அவர் நிரூபிக்கட்டும்,” என்று சவால் விட்டுள்ளார்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்திற்கு, ‘இந்திய அளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்' மிகப் பெரும் எதிர்ப்பு இருப்பதாக சொல்கிறது காங்கிரஸ்.
அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாடுகளை மறுக்கும் மத்திய அரசு தரப்பு, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து மத ஒடுக்குமுறையால் வெளியேறும் அந்நாட்டுச் சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பை வழங்கும் என்கிறது. இந்திய சட்ட சாசனத்தின் மதச்சார்பின்மை இந்தச் சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் சட்டத்தை விமர்சிப்பவர்கள்.
என்பிஆர் மற்றும் என்ஆர்சி-க்கு எதிரான போராட்டம் என்பது, புதிய குடியுரிமைச் சட்டத்தோடு இவை இரண்டும் இணைக்கப்பட்டால் அது முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்று அச்சத்தில் நடக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில் என்பிஆர்-க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது என்ஆர்சி-யின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
முடிவாக பேரணியில் அமித்ஷா, “அவர்கள் எல்லைகளைத் திறந்த நிலையில் வைத்தனர். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னரும் அப்படியே தொடரும் என்று பாகிஸ்தான் நினைத்தது. அவர்கள் அதை காங்கிரஸ் அரசு என்று நினைத்தனர். பாஜக அரசு என்று கணக்குப் போடவில்லை. மன்மோகன் சிங் பிரதமராக இருக்கவில்லை. 56 இன்ச் மார்பகம் கொண்ட நரேந்திர மோடி பிரதமர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். உரி, புல்வாமாவில் தாக்குதல் நடத்தி அவர்கள் தவறிழைத்துவிட்டனர். ஆனால், அதற்கு மோடி அரசு சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்தது. அவர்கள் நாட்டிற்கு உள்ளேயே சென்று தீவிரவாதிகளை நாங்கள் கொன்றோம்,” எனப் பேசினார்.