வியாழன் அன்று நடைபெற்ற போராட்டத்தின்போது ராமச்சந்திர குஹா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Bengaluru: குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, இந்த சட்டமானது நெறிகளுக்கு உட்பட்டதல்ல என்றும், அரசியலமைப்பின் ஆன்மாவுக்கே எதிரானது என்றும் கூறியுள்ளார். அறிவார்ந்த அரசு இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெறும் என்று அவர் மத்திய அரசையும் விமர்சித்துள்ளார்.
இதேபோன்று என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையையும் திரும்பப்பெற வேண்டும் என்றும், அப்படி செய்தால் மட்டுமே மத்திய அரசு மீது நம்பிக்கை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமச்சந்திர குஹா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
1. உடனடியாக என்.ஆர்.சி.யை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மத்திய அரசு மீது நம்பிக்கை ஏற்படும். நாட்டின் காயமும் தீரும்.
2. குடியுரிமை சட்ட திருத்தம் என்பது நெறிகளுக்கு அப்பாற்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவுக்கே எதிரானது. அறிவார்ந்த அரசு இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெறும்.
இவ்வாறு குஹா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
வியாழன் அன்று, கர்நாடக மாநிலம் பெங்களூரு டவுன் ஹாலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது, ராமச்சந்திர குஹா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கும்பலாக கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் பெங்களூருவில் விதிக்கப்பட்டுள்ளன.
தனது கைது குறித்து கருத்து தெரிவித்திருந்த ராமச்சந்திர குஹா, போலீசாரின் நடவடிக்கை அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் என்று கூறியிருந்தார். குடிமக்களின் உரிமையான அமைதியான முறையில் போராட்டம் நடப்பதற்கும் போலீசார் அனுமதிப்பதில்லை என்று அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.