This Article is From Jul 31, 2019

’கஃபே காஃபி டே’ உரிமையாளர் சித்தார்த்தா மரணம் உறுதியானது! - உடல் கண்டெடுப்பு!

’கஃபே காஃபி டே’ உரிமையாளரும், முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் திங்களன்று இரவு முதல் மாயமானார். கடைசியாக சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள பாலத்தில் காணப்பட்டுள்ளார்.

வி.ஜி.சித்தார்த்தா, முன்னாள் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.

Mangaluru/Bengaluru:

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், 'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தாவின்(vg siddhartha cafe coffee day) உடல் கண்டெடுக்கப்பட்டது. 

சித்தார்த்தா திங்களன்று இரவு முதல் மாயமான நிலையில், தொடர்ந்து, 36 மணி நேரம் நடந்த தீவிர தேடுதலுக்கு பின்னர் இன்று காலை 6.30 மணி அளவில் மீனவர்களால் அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது சித்தார்த்தாவின் உடல் தான் என அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் உறுதி செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் கமிஷ்னர் சந்தீப் பாட்டீல் கூறும்போது, இன்று அதிகாலை இந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. எனினும், அது சித்தார்த்தாதானா என்பதை உறுதி செய்ய வேண்டும், என்பதால் இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோம். தொடர்ந்து நாங்கள் அந்த உடலை வென்லாக் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். மேலும் விசாரணைகள் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் நாடு முழுவதும் இயங்கிவரும் பிரபல 'கஃபே காபி டே' நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று இரவு, கடைசியாக மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்று பாலத்தில் தனது காரில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார் பின்னர் அவர் மாயமாகியுள்ளார். 

இதுகுறித்து சித்தார்த்தாவின் ஓட்டுநர் கூறிய தகவலின்படி, நேத்ராவதி ஆற்று பாலத்தில் வண்டியை நிறுத்த சொல்லி சித்தார்த்தா இறங்கி நடந்து சென்றுள்ளார். ஓட்டுநரை காத்திருக்குமாறு கூறி சென்ற அவர், 1 மணி நேரத்திற்கு மேலாகியும் திரும்பிவரவில்லை. இதையடுத்து, பதற்றமடைந்த ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, சமீபத்தில் சித்தார்த்தா ' லாபகரமான தொழிலை உருவாக்குவதில் தோல்வியடைந்துவிட்டேன்' என தன் காஃபி டே ஊழியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.

நான், என்னுடைய அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில நாள்களுக்கு முன்பு, என் நண்பரிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர் என்று உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். 

தொடர்ந்து, சித்தார்த்தா மாயமான 1 கி.மீ நீளமுள்ள அந்த ஆற்று பாலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி நடத்தப்பட்டது. மேலும், மிதவை படகுகள் மூலம் ஆற்றில் இறங்கியும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் என்று பலரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்களின் உதவியை நாடிய போலீசார் அவர்களையும் ஆற்றில் இறங்கி தேட வைத்தனர். 

இந்நிலையில் நீண்ட தேடுதலுக்குப் பின் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தாவின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் அவரது மரணம் உறுதியானது. தற்போது, எஸ்.எம். கிருஷ்ணாவின் வீட்டின் முன் நூற்றுக்கணக்கானவர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

.