This Article is From Feb 06, 2019

கால் டாக்சி ஒட்டுநர் தற்கொலை விவகாரம்! - அமைச்சர் ஜெயக்குமார் ஏளனம்!

தற்கொலை செய்பவர்களுக்கு ஐ.நாவில் சிலை வைக்கப்போவதில்லை என தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுநர் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஏளனமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கால் டாக்சி ஒட்டுநர் தற்கொலை விவகாரம்! - அமைச்சர் ஜெயக்குமார் ஏளனம்!

சென்னை ராமாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற கால் டாக்சி ஓட்டுநர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ஓட்டுநர் ராஜேஷ், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எடுத்த தற்கொலை வாக்குமூலம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

அதில், போலீசார் தன்னை அவதூறாக பேசியதாக தெரிவித்த ராஜேஷ், தனது சாவிற்கு போலீசார்தான் காரணம் என தெரிவித்து, பின்னர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வீடியோ தொடர்பாகவும், அவதூறாக பேசிய நபர் குறித்தும் விசாரிக்க இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் ஓட்டுநர் ராஜேஷ் குற்றம் சாட்டிய போக்குவரத்து காவலர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதேபோல், கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக அவர் மேல் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருந்தால், கீழ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். இப்படி தற்கொலை செய்வதன் மூலம் அவரை நம்பி இருந்த அவரது குடும்பத்திற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை செய்பவர்களுக்கு ஐ.நாவில் சிலை வைக்கப்போவதில்லை. 365 நாளும் அவர்களை நினைத்து யாரும் அழுதுகொண்டும் இருக்கபோவதில்லை. இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பதை உணர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் ஏளனமாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

.