This Article is From Nov 22, 2019

"புதுச்சேரியை திருநங்கை என்று அழைக்கவும்"; நாராயணசாமி ஆதங்கம்!

ஆளுநர் கிரண்பேடி மூலம் நிர்வாகத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

2018ல் புதுச்சேரியை மாநிலமாக அறிவிக்ககோரி கடைசியாக அனுப்பப்பட்ட முன்மொழிவும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

புதுச்சேரியை மாநிலமாக அறிவிக்கோரி பலமுறை வலியுறுத்திய நாராயணசாமி, தற்போது மத்திய அரசு புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக வழிநடத்துவதிலும் முரணாக செயல்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக நேற்றைய தினம் விழா ஒன்றில் கலந்துகொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதவாது, புதுச்சேரியை நீங்கள் மாநிலமாக கருதுகிறீர்களா? அல்லது யூனியன் பிரதேசமாக கருதுகிறீர்களா? என்பதே எனது முக்கிய கேள்வி. பலமுறை புதுச்சேரி மாநிலமாக கருதப்படுகிறது. ஒருசில முறை யூனியன் பிரதேசமாக கருதப்படுகிறது. 

இதற்காக எடுத்துக்காட்டுடன் கூறியுள்ள அவர், 'ஜிஎஸ்டி உள்ளிட்ட எங்கள் வருவாயை பெறும்போது, புதுச்சேரி மாநிலமாக கருதுகிறீர்கள். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் போது புதுச்சேரி யூனியன் பிரதேசமாக கருதுகிறீர்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், நாங்கள் இங்கும் இல்லாமல், அங்கும் இல்லாமல் இருப்பதற்கு, குறைந்தபட்சம் புதுச்சேரியை திருநங்கையாக அறிவித்துவிடுங்கள் என்று மத்திய அரசிடம் தெரிவித்தேன் என்று வேதனையுடன் கூறினார். 

புதுச்சேரியை மாநிலமாக அறிவிக்ககோரி கடைசியாக அனுப்பப்பட்ட முன்மொழிவையும் மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் நிராகரித்தது. 

இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மக்களவையில் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.கிசான் ரெட்டி, புதுச்சேரியை மாநிலமாக அறிவிக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிண்பேடிக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் கிரண்பேடி மூலம் நிர்வாகத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். எனினும், மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

'ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் சகோதரியாக கிரண் பேடி தோன்றுகிறார் என்றும் அவர் தனது அமைச்சரவையின் முடிவுகளை நிராகரிக்கும் போதெல்லாம் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

.