கலைஞர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமரிடம் தான் பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நேற்று இரவு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த கோபாலபுரம் வந்த அவர், அரசு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்ததை அறிந்து கவலை அடைந்ததாக கூறினார்.
இது தொடர்பாக முதலமைச்சரை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். மேலும், பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் அழைத்து இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
சட்ட சிக்கலை காரணம் காட்டி அண்ணா சமாதி அருகே இடம் தர முடியாது என நேற்று தமிழக அரசு கூறியது. இந்நிலையில் அனுமதி வேண்டி, தி.மு.க தொடர்ந்த வழக்கில், இட ஒதுக்கீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை அடுத்து கருணாநிதியின் உடல், அண்ணா சமாதிக்கு பின்புறம் உள்ள இடத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.