This Article is From Jan 11, 2019

பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை? மாநிலங்களவையில் கனிமொழி பேச்சு

பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை மாற்ற முடியாது என மாநிங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தை மாற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை? மாநிலங்களவையில் கனிமொழி பேச்சு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவும், அதிமுகவும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி பேசியதாவது, எதன் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது? என கேள்வி எழுப்பினார். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கிறது என்று அவர் மத்திய அரசு மீது கடுமையாக குற்றம்சாட்டினார்.

மேலும், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன; நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.

முன்னதாக 10% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி நவநீத கிருஷ்ணன் பேசுகையில், பொருளாதார அடிப்படையிலான இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. எந்தவொரு ஆவணமும் கணக்கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது. 10 சதவிகித பொது இட ஒதுக்கீடு நிலையானதாக இருக்காது. சாதி ரீதியிலான பின் தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

.