இறைச்சிகள் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
ஹைலைட்ஸ்
- சிக்கன், மட்டன், கடல் உணவுகளால் கொரோனா வைரஸ் பரவாது.
- வீண் வதந்திகளை இதுபோன்ற நெருக்கடி காலக்கட்டத்தில் பரப்ப வேண்டாம்
- இது அறிவியில் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை
இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடைசியாக பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் குர்கானில் உள்ள அந்நிறுவனத்தில் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்தாலியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதே இந்தியாவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம். இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய விமான நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கொரோனா பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜனவரி 17ம் தேதி முதலே கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆயத்த ஏற்பாடுகளையும் மத்திய அரசு தொடங்கிவிட்டது. வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டும். இந்த புதிய சவாலை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.
இதனிடையே, இறைச்சிகள் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், சிக்கன், மட்டன், கடல் உணவுகளால் கொரோனா வைரஸ் பரவாது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளிலிருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவின.
ஆனால், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா வெட்ப மண்டல நாடு என்பதால், தட்பவெப்பம் 36 டிகிரி செல்சியஸ் மேல் சென்றால் வைரஸ் முற்றிலும் அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். வீண் வதந்திகளை இதுபோன்ற நெருக்கடி காலகட்டத்தில் பரப்ப வேண்டாம்.
பிராய்லர் கோழி, அதன் முட்டைகளைச் சாப்பிடுவதால், கொரோனா வைரஸ் பரவும் என்பது முற்றிலும் தவறான தகவல். இந்த வைரஸ் தொற்று ஏற்கனவே விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், தற்போது இது மனிதர்களிடம், இருந்து சக மனிதர்களுக்குப் பரவி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.