கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக்கியது தொடர்பாக, கஞ்சா பயன்பாட்டளர்கள் மற்றும் அந்த தொழிலில் முதலீடு செய்பவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்
Ottawa, Canada: கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்கியுள்ளது கனடா.
கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக்கியது தொடர்பாக, கஞ்சா பயன்பாட்டளர்கள் மற்றும் அந்த தொழிலில் முதலீடு செய்பவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அதே நேரத்தில் கஞ்சா பயன்படுத்துவது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று கூறி சுகாதார வல்லுநர்கள், சட்ட நடவடிக்கையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், ‘கஞ்சாவை பயன்படுத்தலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது, நம் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதற்காக அல்ல. அதை நம் குழந்தைகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான்.
நம் குழந்தைகளைக் காக்க நாம் பலகட்ட முன்னெடுப்புகளை செய்ய வேண்டியுள்ளது. கஞ்சா துறையில் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் தொழிலை நாம் ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்’ என்று பேசியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு, கனடாவின் பிரதமர் ஆக, ட்ரூப் பிரசாரம் செய்த போது, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்படி தான், கானபிஸ் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை, உருகுவேயிக்குப் பின்னர் கனடா தான், கஞ்சாவை சட்டபூர்வமாக மாற்றியுள்ளது.
அடுத்த ஆண்டு கனடாவில் மீண்டும் தேர்தல் வர உள்ள நிலையில், ட்ரூடின் இந்த நடவடிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கனடாவில் சட்டபூர்வமாக விற்கப்படும் கஞ்சா குறித்து மற்ற மேற்கத்திய நாடுகளும் கவனமாக பார்த்து வருகின்றன. கனடாவில் இந்த நடவடிக்கை நேர்மறை விளைவைக் கொடுத்தால் பிற நாடுகளும் நம்மைப் பின்பற்றும் என்று பிரதமர் ட்ரூடும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு, ட்ரூட் கூட, தான் கஞ்சா பயன்படுத்தி இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் கனடா பிரதமர் அலுவலகம், ‘கஞ்சாவுக்கான தடை நீக்கப்பட்டப் பிறகும் பிரதமர் அலுவலகம் அதை வாங்கி பயன்படுத்தாது’ என்று தெளிவு படுத்தியுள்ளது.