தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதா? கொதித்தெழுந்த திருமாவளவன்!
ஹைலைட்ஸ்
- தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதா? கொதித்தெழுந்த திருமாவளவன்!
- மத்திய அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
- நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஊதியம் பிடித்தம், இரண்டாண்டுகளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்வதற்கான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வீடியோ காட்சி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு உட்பட அனைத்து மாநில ஆளுநர்களும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பள குறைப்பை மேற்கொள்ளுமாறு தாமாக முன்வந்து முடிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுக்கும் ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பளம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் ரூ.7,900 கோடி சேமிக்கப்படும் என்றும், அந்த பணம் நாட்டின் ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும் என்றும் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கூறியதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்போவதாக தன்னிச்சையாக முடிவெடுத்து மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியிருப்பது, இந்த நாடு ‘பொருளாதார அவசரநிலையை' நோக்கிப் போகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஒருமாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூடுதலாக ஒரு மாத ஊதியத்தை புதுச்சேரி மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் அளித்துள்ளோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசின் கணக்கிற்கும் ஓரிரு மாதங்களுக்கான ஊதியத்தை வழங்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூறியிருந்தால் அதிலே ஒரு நியாம் உள்ளது. ஆனால் உறுப்பினர்களின் கருத்தை அறியாமல் மத்திய அரசே தன்னிச்சையாக சம்பளத்தைக் குறைத்து அவசர சட்டம் பிறப்பித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும்.
ஜனநாயக நடைமுறைகளுக்கு முரணான இந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்து அந்தத் தொகையை ஒருங்கிணைந்த நிதியில் சேர்த்திருப்பதும் ஜனநாயக அணுகுமுறை இல்லை. இது ஏற்புடையதும் அல்ல.
தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்தந்தத் தொகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்வதற்கானது. அதன்படி, இது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, தொகுதி மக்களை வஞ்சிப்பதுமாகும். எனவே, இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.