This Article is From May 19, 2020

இலவச மின்சாரம் ரத்து: விவசாயிகள் மீது நடத்தப்படும் கருணையற்ற தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனை விதிப்பது, மத்திய அரசின் மனதிற்குள் அரவம் போல் புகுந்திருக்கும் கந்துவட்டி மனப்பான்மையைக் காட்டுகிறது.

இலவச மின்சாரம் ரத்து: விவசாயிகள் மீது நடத்தப்படும் கருணையற்ற தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

இலவச மின்சாரம் ரத்து: விவசாயிகள் மீது நடத்தப்படும் கருணையற்ற தாக்குதல்: ஸ்டாலின் கண்டனம்

இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வது என்பது விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கருணையற்ற பேரிடர் தாக்குதல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே முதன்முறையாக, அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கிய கருணாநிதியின் முன்னோடித் திட்டத்தை, கொரோனா பேரிடரை 'நல்ல சமயம் இது; நழுவ விடக்கூடாது' என்றெண்ணி, அதைத் தவறாகப் பயன்படுத்தி, ரத்து செய்ய அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய பாஜக அரசுக்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, 1989-ம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, 1990 முதல், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இந்த இலவச மின்சாரத் திட்டம் விவசாயிகளுக்கு ஒப்பற்ற திட்டமாக இன்றளவும் இருந்து வருகிறது.

ஏற்கெனவே, தாங்க முடியாத கடன், விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமல் தவிப்பு, வாழ்வாதாரம் இழந்ததால் தற்கொலை எனப் பல துயரங்களையும், இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்து வரும் விவசாயிகள் மீது நடத்தப்படும் மனிதாபிமானமற்ற கருணையற்ற பேரிடர் தாக்குதல் இது!

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையைச் சீர்செய்ய அனுமதி கேட்கும் மாநிலங்களிடம், 'நீங்கள் கடன் பெற வேண்டும் என்றால் முதலில் மின்சார மானியத்தை ரத்து செய்யுங்கள். அதுவும் 2020 டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஒரு மாவட்டத்திலாவது செயல்படுத்திக் காட்டுங்கள்' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிபந்தனை விதிப்பது, மத்திய அரசின் மனதிற்குள் அரவம் போல் புகுந்திருக்கும் கந்துவட்டி மனப்பான்மையைக் காட்டுகிறது.

இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும் நோக்கில், 2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, ஊரடங்கு நேரத்திலும் அதன் மீது மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கும் மத்திய அரசு, அச்சட்டத்தை நிறைவேற்றும் முன்பே, மின்சார மானியங்களைப் பறித்துக் கொள்ளும் குறுக்குவழிகளைக் கடைப்பிடிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

வெள்ளைக்காரத் துரைத்தனத்தை நினைவுபடுத்தும் இந்தக் கெடுபிடியான உத்தரவு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை மட்டுமின்றி, நெசவாளர்கள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் உள்ளிட்ட இலவச மின்சாரத்தை அனுபவித்து வரும் பல தரப்பட்ட நுகர்வோருக்கும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருக்கிறது. ஆகவே, இந்த மானியம் ரத்து செய்யும் நிபந்தனையை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.