This Article is From Mar 27, 2019

பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்

பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.

Advertisement
தமிழ்நாடு Written by (with inputs from NDTV)


பராமரிப்புப் பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு நடத்துமாறு தீர்ப்பயாம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலையை ஆய்வு செய்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஆலையை திறக்கலாம். ஆலையை மூடியது சரியல்ல எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் அறிக்கை அளித்திருந்தது. இதனால் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில் ஆலை திறப்பதற்கான உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. பின்னர், வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சந்திக்க வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வேதாந்தா குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஆலையை திறக்காததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் தனது மனுவில் தெரிவித்து இருந்தது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து, விசாரணையை வரும் ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement