This Article is From Aug 14, 2018

இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே தடுப்புகளில் மோதிய கார்… மக்கள் காயம்!

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு அருகேயுள்ள தடுப்புகளில் இன்று ஒரு கார் வேகமாக மோதியது

இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே தடுப்புகளில் மோதிய கார்… மக்கள் காயம்!
London:

இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு அருகேயுள்ள தடுப்புகளில் இன்று ஒரு கார் வேகமாக மோதியது. இதில் இருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. கார் மூலம் விபத்து ஏற்படுத்தியவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லண்டன் போலீஸ், ‘இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். ஆனால், தீவிரவாதத்துக்கு எதிராக செயல்படும் குழுதான் தற்போது சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறது’ என்று தகவல் தெரிவித்துள்ளது.

கார் மூலம் விபத்து ஏற்படுத்திய உடனேயே, வாகனத்தை ஓட்டி வந்த ஆணை போலீஸ் சுற்றி வளைத்துக் கைது செய்தது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், ‘நாடாளுமன்றத்துக்கு அருகில் இருந்த தடுப்புகளை கார் வேகமாக மோதியது. அது வேண்டுமென்றே செய்யப்பட்டது போலத்தான் இருந்தது. அது மிகவும் அதிர்ச்சியளித்தது. கார் தடுப்புகளில் மோதியவுடன், அதிலிருந்து அதிக அளவு புகை கிளம்பியது. வாகனத்தால் மோதப்பட்டு, கிட்டத்தட்ட 10 பேர் சாலையில் கிடந்தனர். ஆனால், யாரும் இறந்தது போல் தெரியவில்லை’ என்று கூறினர்.

வெஸ்ட்மின்ஸ்டர் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் விபத்து நடந்த போது மக்கள் பிரதிநிதிகள் யாரும் உள்ளே இல்லை. இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் அடுத்தடுத்து இதைப் போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால், அங்கிருப்பவர்களை இது கவலை கொள்ள வைத்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.