தொழில் தகராறு: காருக்குக்குள் இருந்த மூன்று நபர்களுடன் தீ வைத்த கொடூரம்!
Vijayawada: ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் காருக்குள் இருந்த மூன்று நபர்களுடன் அந்த காருக்கு ஒருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், காருக்குள் இருந்த மூவரும் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
இந்த தாக்குதலுக்கு ரியல் எஸ்டேட் தகராறு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மூத்தபோலீஸ் அதிகாரி ஹர்ஷவர்தன் ராஜூ கூறும்போது, காருக்கு தீ வைத்த நபர் வேணுகோபால் ரெட்டி என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேணுகோபால் ரெட்டி சில காலங்களுக்கு முன்பு கங்காதருடன் தொழில் கூட்டாளியாக இருந்துள்ளார். அவர்கள் செகன்ட் ஹேண்ட் கார்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளனர். எனினும், அவர்களது வணிகம் சரியாக செல்லவில்லை. இதையடுத்து, இழப்புகளைச் சந்தித்ததால் இருவரும் பிரிந்துள்ளனர்.
தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட வேணுகோபால் ரெட்டி கங்காதருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளார். எனினும், அவர் பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
இதனிடையே, நேற்றைய தினம் கங்காதர், அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட மூவரும் வேணுகோபால் ரெட்டியை சந்திக்க சென்றுள்ளனர். சம்பவம் நடந்த சமயத்தில் நான்கு பேரும் காருக்குள் வைத்து இந்த விஷயத்தை பற்றி விவாதித்து கொண்டிருந்துள்ளனர்.
மாலை 4.45 மணியளவில், வேணுகோபால் சிகரெட் புகைக்க வேண்டும் என்று சாக்கு சொல்லி காரில் இருந்து வெளியே இறங்கியுள்ளார். அப்போது, அவர் மது பாட்டிலில் தான் கொண்டு வந்த பெட்ரோலை காரில் ஊற்றி தீ வைத்து விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான காட்சிகளில் சாலையோரம் நிற்கும் காரில் இருந்து தீப்பற்றி எரிகிறது. இதனை சுற்றி மக்கள் நிற்கின்றனர்.
தொடர்ந்து, காருக்குள் இருந்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். அதில், தம்பதியினருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. உடன் வந்த அவர்களது நண்பருக்கு தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, கங்காதரின் மனைவி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கங்காதரின் அறிக்கையை பதிவு செய்ய அவரை மட்டும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றுள்ளனர்.
(With inputs from ANI)