This Article is From Aug 22, 2019

இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்தான் ப.சிதம்பரத்தை சிக்கவைத்ததா… பின்னணி என்ன?

இந்திராணி முகர்ஜி, தனது மகளான ஷீனா போராவைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அந்த வழக்கில்தான் தற்போது சிறையில் இருக்கிறார்

இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்தான் ப.சிதம்பரத்தை சிக்கவைத்ததா… பின்னணி என்ன?

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்திராணி முகர்ஜி, ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Mumbai:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தினால்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்று தகவல் தெரிந்த வட்டாரம் NDTV-யிடம் கூறியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவின் தலைவர்களாக இருந்தவர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவரான பீட்டர் முகர்ஜி. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாகா பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்திராணி முகர்ஜி, தனது மகளான ஷீனா போராவைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அந்த வழக்கில்தான் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் வழக்கில் அவர் அப்ரூவராக மாறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 

இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டித்தான், ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதாம். அதைத் தொடர்ந்துதான் சிதம்பரத்துக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அவருக்கு முன் ஜாமீன் கொடுக்காததை அடுத்து, நேற்று மாலை சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 

“சிதம்பரம், வெளிநாட்டு முதலீடுகள் பெற்றுத் தருவதற்கு உதவுவதாக கூறினார். அதற்கு கைமாறாக, கார்த்தி சிதம்பரத்துக்கு வியாபார நோக்கில் உதவ வேண்டும் எனத் தெரிவித்தார்” என்று இந்திராணி, அமலாக்கத் துறையிடம் கூறியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரம் NDTV-யிடம் கூறியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்திராணி முகர்ஜி, ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பீட்டர் முகர்ஜியும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திராணி, விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் அப்ரூவராக மாறியுள்ளார். 
 

.