This Article is From Apr 16, 2020

நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்த வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நிவாரணம் வழங்குவோர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்த வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்த வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஹைலைட்ஸ்

  • வாகன ஓட்டுனர் உள்பட 4 பேர் சென்று நிவாரணம் வழங்கலாம்
  • நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
  • தகவல் தெரிவித்தால் போதும் அனுமதி கேட்கத்தேவை இல்லை.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமப்படும் பொதுமக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்க தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து நேற்று முன்தினம் பிரதமர் மோடி உத்தரவிட்டார். 

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல் கடும் சிரமமடைந்து வரும், கூலித் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறு வழங்குவது சமுதாய விலகலுக்கு எதிராக உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இனி உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும், அரசு, மாநகராட்சி, போலீஸார் மூலமே நிவாரணப் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு இந்த வழக்கில் அரசு பதிலளிக்க அவகாசம் அளித்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தீர்ப்பில் கூறுகையில், நிவாரணப் பொருட்களை வாகன ஓட்டுனர் உள்பட 4 பேர் சென்று வழங்கலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது. 

நிவாரணம் வழங்குவோர் முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை வழங்குவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தகவல் தெரிவித்தால் போதும் அனுமதி கேட்கத்தேவை இல்லை. நிவாரணப் பொருள் வழங்குவது குறித்து 48 மணி நேரத்துக்கு முன் அதிகாரிகளுக்கு தகவல் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

.