புதுடில்லி:தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, வருமான வரித் துறையினர் மாதவ ராவ் அலுவலகத்தில் சோதனையிட்டு அவரின் டைரியை கைப்பற்றிய போது, அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டதற்கான தகவல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, பெங்களூர், மும்பை மற்றும் குண்டூர் ஆகிய 7 நகரங்களில் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 13 அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
லஞ்சம் வாங்கி கொடுப்பதற்காகவே சென்னையில் உள்ள சில இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதனை அடுத்து, சிபிஐ நடத்திய தீவிர விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து சிபிஐ நடத்திய விசாரணையில், குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோரும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)