அஸ்தானாவை கைது செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது
ஹைலைட்ஸ்
- 1986 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரி நாகேஷ்வர் ராவ்
- வெர்மா மற்றும் அஸ்தானாவின் அறைகளுகுக சீல் வைக்கப்பட்டுள்ளது
- சிபிஐ-யின் இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ராவ்
New Delhi: சிபிஐ புலனாய்வு அமைப்புக்குள் அதன் இயக்குநர் (CBI director) அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோரிடையே பனிப் போர் நிலவி வருகிறது. இதனால் வெர்மா, அஸ்தானா மற்றும் பல சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையில் நாகேஷ்வர் ராவ், சிபிஐ-யின் இடைக்கால இயக்குநராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த நாகேஷ்வர் ராவ், சிபிஐ-யின் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். ராவின் நியமனம் குறித்து பிரதமர் தலைமையிலான நியமனக் குழு, ‘சிபிஐ-யின் இயக்குநர் செய்யும் வேலைகளை நாகேஷ்வர் ராவ் பார்த்துக் கொள்வார். அதை அவர் உடனடியாக செய்ய ஆரம்பிப்பார்' என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ வட்டாரம், சிபிஐ இயக்குநருடன் சேர்ந்து வேலை பார்த்த அனைத்து அதிகாரிகளும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். டெல்லியில் இருக்கும் சிபிஐ தலைமையகத்தில் உள்ள 10 மற்றும் 11 வது மாடிகளில் இருக்கும் அனைத்து அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
விஜிலன்ஸ் கமிஷனர் கேவி சவுத்ரி தான், இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதம் தெரிவிக்கவே, உடனடியாக கட்டாய விடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்னர் அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது.
ராகேஷ் அஸ்தானா, குஜராத்தைச் சேர்ந்த அதிகாரி. அவருக்கு சென்ற ஆண்டு தான் சிபிஐ சிறப்பு இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவரின் நியமனத்துக்கு சிபிஐ இயக்குநராக இருந்த வெர்மா அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார்.
‘அலோக் வெர்மா, சிபிஐ இயக்குநராக 2 ஆண்டுகள் நீடிப்பார் என்ற உத்தரவு இருக்கிறது. அதை உடனடியாக மாற்ற முடியாது. பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து அது குறித்து முடிவெடுத்த பின்னரே, இயக்குநர் பதவி பறிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ளார்.
நேற்று டெல்லி நீதிமன்றத்தில், ராகேஷ் அஸ்தானா, தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், அலோக் வெர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்கட்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை அஸ்தானாவை கைது செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.