சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
New Delhi: உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு பின்னர் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா தற்போது பணிக்கு திரும்பியுள்ளார். சிபிஐ-க்குள் அதிகாரப் போட்டி நடந்ததை தொடர்ந்து அலோக் வர்மாவும், துணை இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனாவும் அக்டோபர் 24-ம்தேதி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் 10-வது மாடியில் செயல்பட்டு வந்த அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24-ம்தேதி அதிகாலை 2 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.
பணியை தொடரலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தபோதிலும் மிக முக்கிய கொள்கை ரீதியிலான முடிவுகளை அலோக் வர்மாவால் எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிபிஐ இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் கட்டாய விடுப்பில் அலோக் வர்மா செல்ல வைக்கப்பட்டதால் அதனை எதித்து அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இதில் அவருக்கு சாதகமான உத்தரவு வெளிவந்துள்ளது.
அலோக் வர்மாவின் பதவிக் காலம் ஜனவரி 31-ம்தேதியுடன் முடிவடைகிறது. கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ள துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இன்னமும் விடுப்பில்தான் இருக்கிறார். அவரது பணியிட மாற்றம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வழக்கு ஒன்றிலிருந்து தப்ப வைப்பதற்காக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் பல கோடி ரூபாய் பணத்தை அலோக் வர்மா வாங்கினார் என்று, துணை இயக்குனர் ராகேஷ் அஸ்தனா புகார் அளித்திருந்தார். இதே விவகாரத்தில் அலோக் வர்மாவும், அஸ்தனா மீது புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் கடைசியில் பிரதமர் மோடி வரைக்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.