மகாராஷ்டிராவில் ஏ.டி.ஜி.பி.-யாகவும் லக்ஷ்மி நாராயணா பணியாற்றியுள்ளார்.
Tirupati, Andhra Pradesh: சிபிஐ- அமைப்பின் முன்னாள் இணை இயக்குனராக பொறுப்பு வகித்த லக்ஷ்மி நாராயணா தான் ஆந்திர அரசியலில் இறங்கப்போவதாக இன்று அறிவித்துள்ளார். கடைசியாக மகாராஷ்டிராவில் ஏ.டி.ஜி.பி.-யாக இருந்த அவர், விருப்ப ஓய்வுக்காக கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்துள்ளார்.
1990-ம் ஆண்டின் ஐ.பி.எஸ். பிரிவை சேர்ந்த லக்ஷ்மி நாராயணா, சத்யம் முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்தவர். அவர் அளித்துள்ள பேட்டியில், மகாராஷ்டிராவில் ஏ.டி.ஜி.பி.-யாக பணியாற்றியபோது விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்திருந்தேன். எனது கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் நான் அரசியலில் இறங்குவதற்கான காரணம்.
நான் ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று பார்வையிட்டேன். அங்கு மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகளை சந்தித்தேன். ஒவ்வொரு கிராமத்திற்கும் அந்த கிராமத்திற்கு ஏற்ற தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அரசியல் தலைவர்களிடம் அளிப்பேன். ஒன்று ஏதாவது அரசியல் கட்சியில் சேர்வேன். இல்லாவிட்டால் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியுள்ளார்.