சென்னை (பிடிஐ): தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பதற்காக காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் தரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவே, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம், குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் குட்கா அதிபர் மாதவ ராவிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது. குட்கா அதிபர் மாதவ ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பெயர்களின் அடிப்படையில் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ சோதனை செய்தது.
லஞ்சம் வாங்கி கொடுப்பதற்காகவே சென்னையில் உள்ள சில இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதனை அடுத்து, சி.பி.ஐ நடத்திய தீவிர விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து சி.பி.ஐ நடத்திய விசாரணையில், குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், ஶ்ரீநிவாச ராவ் ஆகியோரும் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குட்கா ஊழல் விவகாரத்தில் கைதான மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரை நான்கு நாள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)